ஒரு காட்டில் ஒரு தாய் யானையும் குட்டி யானையும் வாழ்ந்து வந்தன. தந்தை யானை சில வருடங்களுக்கு முன்னால் மனிதர்களால் பிடிக்கப்பட்டு நாட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்படட்து.தாய் யானை குட்டி யானை எதைச் செய்தாலும் ஏசுவதே வழக்கமாக இருந்தது. தாயின் நச்சரிப்பை தாங்க முடியாது தாயிடம் இருந்து தப்பி ஓடுவதற்கு முடிவு செய்தது. ஒரு நாள் தாய் யானை மரத்தின் கீழே நித்திரை செய்யும் போது குட்டி யானை மெதுவாக நடந்து சென்று அடர்ந்த காட்டுக்குள் ஓடிவிட்டது. அக்காட்டை தாண்டியதும் அங்கே ஒரு குளம் தென்பட்டது.

குளக்கரை ஒரமாக குட்டி யானை நடந்து சென்றது. அங்கு விழுந்து கிடந்த மரக்கட்டையில் இடறி குட்டி யானை உருண்டு உருண்டு குளத்துக்குள் விழுந்தது. குளத்தின் தண்ணீர் வற்றிப் போனதால் குட்டி யானையின் உடம்பில் சேறும், சகதியும் ஒட்டிக்கொண்டது.

சற்று நேரத்தில் குட்டி யானை எழுந்து நின்றது. தன் சிறிய தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி வெளியே துப்பியது. மீண்டும் குளத்தின் கரைப் பகுதிக்கு குட்டியானை மரத்தின் கிளைகளை தும்பிக்கையால் பற்றிப் பிடித்து குளத்தில் இருந்து வெளியே வந்தது.

குளத்தின் மறுபக்கம் பச்சை புள்வெளி ஒன்று தென்பட்டது. அதை நோக்கி குட்டி யானை நடந்து சென்றது. குட்டி யானை நடந்து செல்லும் போது தனக்குத்தானே பேசிக்கொண்டது. இந்த உலகத்தில் நான் யானையாக பிறக்காமல் வேறு ஏதாவது மிருகமாக பிறந்து இருக்கக்கூடாதா?

நான் யானையாக பிறக்காமல் பாம்பாகக் கூட பிறந்திருக்கலாம். இவ்வாறு சிந்தித்துக் கொண்டு  குட்டியானை நடந்து வரும் போது எதிரே வாழைமரங்கள் தோட்டம் இருந்தது. அதில் ஒரு மரத்தில் வாழைக்குழை ஒன்று பழுத்துத் தொங்கியாது. குட்டி யானைக்கு வாழைப்பழம் தின்ன வேண்டும் என்ற ஆசை வந்தது. உடனே தன் சிறு தும்பிக்கையை வாழைப்பழத்தை நோக்கி நீட்டியது. சேறு பட்ட தும்பிக்கை வாழைக்குழையை பிக்க முடியாமல் வழுக்கத் தொடங்கியது. குட்டியானை தும்பிக்கையால் இறுக்கிப்பிடித்தது.

அப்போது வாழைப்பழங்கள் குட்டியானையின் தலையில் ஒவ்வொன்றாக விழ அரம்பித்தன. குட்டி யானை இடறி ஒரு பாம்பின் மீது விழுந்தது. பாம்புக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. முட்டாள் யானையே வழியைப் பார்த்து வரத் தெரியாதா?

வீதியில் எப்படிப் போக வேண்டும் என்று உன் உம்மா வப்பா சொல்லித்தர வில்லையா? அதற்கு குட்டி யானை பின் வருமாரு பதிலளித்தது. கிழட்டுப் பாம்பே நீயே ஊர்ந்து செல்கிறாய் என்னை ஏசுவதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது. என்று கூறிவிட்டு காட்டை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கியது. வெயில் கடுமையாக இருந்தது. சற்றுத்தூரத்தில் ஒரு சேற்றுக்குட்டை தென்பட்டது. அந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் குளிராகவும் ஈரமாகவும் இருந்தது.

அச் சேற்றுக்குட்டையை கண்ட குட்டியானை தனக்குத்தானே பேசிக்கொண்டது. நான் ஒரு முதலையாக இருந்திருக்கக்கூடாதா? இந்த சேற்றுகுட்டையில் மூழ்கி நீந்திப் பார்க்கலாம். என் அரைவாசி உடம்பை இந்த சேற்றுக் குழியில் மரைத்துக் கொள்ளலாம். பின்னர் வாயை ஆவென்ரு திறந்து பூச்சி புலுக்களை விழுங்கிச் சாப்பிடலாம். பின்னர் சேற்றில் புரண்டு தண்ணீரை என்மேல் தெளித்துக் கொள்வேன். என்னைக் கண்டு எல்லா மிருகங்களும் பயப்படும் என்னிடம் அவைகள் நெருங்க முடியாது. இவ்வாறு குட்டியானை பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே சத்தம் கேட்டது.

முட்டாள் யானையே என் முதுகை விட்டு இறங்குகிறாயா இல்லையா?

குட்டியானை நின்று கொண்டிருந்த சேற்றுக் குட்டை மெது மெதுவாக அசைய ஆரம்பித்தது. யானையின் கால்கள் உயர்வதும் பணிவதுமாக இருந்தன.

உடனே குட்டியானை சூடான மணற்பரப்பில் கால் வைத்தது. சேற்றுக் குட்டையில் இருந்து சற்றுவிலகி நின்று பார்த்த போது பிரமாண்டமான முதலையின் முதுகில் தான் ஏறி நின்றிருக்கிறேன் என்று விளங்கியது. அப்போது முதலை குட்டி யானையை அழைத்து முதலைகள் இருக்குமிடத்துக்கு போகக்கூடாது என்று உம்மா உனக்கு சொல்லவில்லையா? என்று கேட்டது.

முதலையாரே நீ சேற்றில் வாழ்பவன். எனக்கு உபதேசிப்பதற்கு நீ யார்? என்று கூறிய குட்டி யானை அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. ஓடி ஓடி காட்டின் விசாலமான பகுதிக்கு வந்து சேர்ந்தது அங்கே ஏராளமான மாமரங்கள் இருந்தன. அவற்றிலே குரங்குகள் ஏறுவதும், பாய்வதும் கிளைகளில் தொங்குவதும் மாங்காய்களை தின்று விட்டு வீசுவதுமாக விளையாடிக் கொண்டிருந்தன. நான் ஒரு குரங்காக இருந்திருக்கக் கூடாதா! குரங்காக இருந்தால் இந்த மரங்களில் எவ்வளவு சந்தோசமாக ஏறலாம் மாமரத்தின் கிளையில் கொழுவி, தொங்கி விளையாடலாமல்லவா அங்கிருந்து தும்பிக்கையை நீட்டி மாம்பழத்தை பரித்து உண்ணலாமல்லவா?

மாம்பழத்தின் கொட்டையை இந்தகுரங்குகள் செய்வதைப் போல் வீசியடிக்கலாமல்லவா? என்பதெல்லாம் குட்டியானை தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டது. குட்டியானை அங்கிருந்த குன்று ஒன்றிலே ஏறியது மரத்தின் கிளையை தன் வாயால் சுற்றியது. பின்னர் மாம்பழத்தை நோக்கி தன் தும்பிக்கையை நீட்டியது. குழந்தைகளே அதன் பின் யானைக்கு என்ன நடந்தது தெரியுமா? மரத்தில் இருந்து சில மாங்காய்கள் விழுந்தன. அதனால் குட்டியானையார் குன்றிலிருந்து தடார் என்று கீழே விழுந்தார்.

மரத்திலிருந்த குரங்குகலெல்லாம் ஆ…….ஆஹா………. என்று சிரித்தன. அதிலே ஒரு குரங்கு குட்டியானையே உனக்குப் புத்தியில்லையா? என்று கேட்டது. அதற்கு குட்டியானை குரங்காரே வயைப் பொத்திக் கொண்டு சும்மா இரும். இல்லாவிட்டால் மரத்தில் ஏறி கிளைக்குகிளை பாய்ந்து விளையாடும் நீர் புத்தி செல்வதற்கு நான் யார்?

குட்டியானை அங்கிருந்து ஓட ஆரம்பித்தது ஓடும் வழியிலே இரண்டு சிங்கக் குட்டிகள் நித்திரை செய்து கொண்டிருந்தன. குட்டியானைக்கு தைரியம் வந்தது. இந்த சிங்கங்களை விட தான் பலசாலி என்ற எண்ணம் வந்தது. சிங்கப் பயல்களே என்ன உறங்குகிறீர்கள் நான் யார் என்று தெரியுமா?…

இந்தக் காட்டில் என்னை எதிர்ப்பதற்கு யாரும் கிடையாது. என்ன பூனைக்குட்டிகளைப் போல் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று குட்டியானை சப்தமாக கேட்டது. அப்போது காடே அதிரும் படி ஒரு கர்ச்சனை கேட்டது. அங்கே ஒரு பெரிய சிங்கம் பாய்ந்து வந்தது கொண்டிருந்தது. தன் குட்டிகளைப் பாதுகாப்பதற்காக அது வந்தது. என் குட்டிகளை ஏசுவதற்கு நீ யார்?… முட்டாள் யானையே சிங்கத்திடம் போகக் கூடாது என்று உன் உம்மா சொல்லித்தரவில்லையா?…. குட்டியானைக்கு பயம் பிடித்துவிட்டது. உம்மா கற்றுத்தந்ததாக எனக்கு ஞாபகமில்லை என்று கூறி சிங்கத்தை விட்டு மெல்ல மெல்ல பின் வாங்கியது. இந்த பெரிய சிங்கத்தின் முன்னால் தான் சிறியவன் என்பதை குட்டியானை உணர ஆரம்பித்தது.

குட்டியானையே நீ இன்று எமக்கு உணவாகப் போகிறாய். நான் உன்னை கடித்துத் தின்னப் போகிறேன். குட்டியானை பயத்தில் முகம் குப்புற விழுந்தது. ஆனால் மூக்கில் புகுந்த மண்னை உடனே எழும்பிக் குந்தியது. திரும்பிப் பாராமல் ஒட ஆரம்பித்தது. பசி எடுத்த பெரிய சிங்கம் குட்டியானையை விரட்ட ஆரம்பித்தது. குட்டி யானைக்கு ஓட ஓட மூச்சு வாங்கியது சிங்கத்திடம் போய் ஏன் மாட்டிக் கொண்டோம் என்று தன்னைத்தானே நொந்து கொண்டது.

சிங்கம் அதனைத் தொடர்ந்து விரட்டிக் கொண்டு சென்றது. ஆனால் வயது போனதால் பெரிய சிங்கத்திற்கு தொடர்ந்து ஓட முடியவில்லை. குட்டி யானை மரங்களை முறித்துக் கொண்டு ஓடியது. ஓடி தீக் கோழிகள் வாழும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. நீண்ட காலத்துக்கு முன் தீக் கோழிகள் இட்டமுட்டைகள் அங்கு இருந்தன. ஒவ்வொரு முட்டையும் பழூனைவிட பெரிதாக இருந்தது. ஒவ்வொரு முட்டையும் கல்லைவிடவும் கடினமாக இருந்தது. குட்டியானை தாயின் உபதேசத்தை மனதில் நினைத்துக் கொண்டது. தீக்கோழிகளின் முட்டை மீது மிதிக்காமல் ஓடியது. ஆனால் பின்னால் விரட்டி வந்த சிங்கம் தீக் கோழிகளின் முட்டையை மிதித்துக் கொண்டோடியது. காலில் அம் முட்டைகள் மோதியதால் சிங்கம் கர்ச்சித்தது. குட்டி யானை முன்னால் ஓடிக் கொண்டிருந்தது. அங்கே ஒரு முள்ளம் பன்றி குறுக்கேவந்தது. குட்டியானை தாயாரின் உபதேசத்தை நினைத்துப் பார்த்தது. முள்ளம் பன்றிகளைக் கண்டால் அதன் அருகில் போய் விடாதே அதன் மேல் மிதித்து விடாதே என்ற தாயாரின் உபதேசம் ஞாபகத்திற்கு வரவே முள்ளம் பன்றியை சுற்றி ஓடியது. பின்னால் வந்த சிங்கம் முள்ளம் பன்றியை காணவில்லை. ஆனால் முள்ளம் பன்றி சிங்கத்தைக் கண்டு கொண்டது. குழந்தைகளே என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?…

கிழட்டுச் சிங்கம் ஆ…ஊ… என்று அழ ஆரம்பித்தது. அதன் உடம்பு முழுக்க முள்ளம் பன்றியின் முற்கள் குத்தி வழி எடுத்தது. குட்டி யானை திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டமாக ஓடியது. ஓடும் வழியில் வாழைமரங்கள் இருந்தன. அதில் வாழைக் குழைகளும் பழுத்து இருந்தன. ஒரு மரத்தில் குழவிக் கூடு ஒன்று இருந்தது. அம் மரத்தில் பழுத்த வாழைப் பழங்களும் இருந்ததால் ஆனாலும் ஒரு வாழைப் பழத்தை திருகி வாயில் போட்டுக் கொள்ளலாமா என்ற ஆசையும் எழுந்தது. குழவிக் கூட்டை உடைத்து விடவும் கூடாது. ஆசை மிகுதியால் குட்டி யானை தும்பிக்கையை நீட்டி ஒரு வாழைப் பழத்தைப் பித்தது அது இழுத்த இழுப்பில் வாழை மரம் உடைந்தது. குழவிக்கூடு விழுந்தது. அதிலிருந்து ஏராளமான குழவிகள்  கோபத்தோடு வெளியே பறந்து வந்தன. தப்பினோம் பிழைத்தோம் என்று குட்டி யானை ஓட ஆரம்பித்தது. பின்னால் வந்த சிங்கத்திற்கு இது தெரியாது. சிங்கம் ஆ… ஊ… என்று அழ ஆரம்பித்தது.

முள்ளம் பன்றியின் முற்கள் போதாதென்று குழவிகள் சிங்கத்தை கொட்ட ஆரம்பித்தன. குட்டியானை திரும்பிப் பார்த்தது சிங்கத்தை காணவில்லை. சிங்கத்தின் பயம் இல்லாததால் குட்டி யானை மெதுவாக நடக்க ஆரம்பித்தது. சிங்கத்தின் நிலையோ மிகமோசமாக இருந்தது.

முள்ளம் பன்றியின் முற்களும் குழவிகளின் கொட்டுதலிலும் வலி பொறுக்க முடியாத சிங்கம் வந்த வழி திரும்பிச் சென்றது. குட்டி யானை கடைசியாக நதிக் கரைக்கு வந்து சேர்ந்தது. அங்கே தன் தாயைக் கண்டது. உம்மா உம்மா இதோவந்து விட்டேன். என்னைத் தேடினீங்களா? என்று கேட்டது. எங்கே போய் இருந்தாய் மகனே? என்று தாய் யானை கேட்டது. குட்டி யானை நடந்தவற்றையல்லாம் ஒன்று விடாமல் கூறி முடித்தது.